Last Updated:
MK Stalin | உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டின் போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். அதன்பின், செப்டம்பர் இரண்டாம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.
மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் சந்திக்க உள்ளார். இதற்கிடையே, செப்டம்பர் 7 ஆம் தேதி அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர்.
சிகாகோவிலும் பல்வேறு முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
August 27, 2024 7:01 AM IST
