சென்னை: கனமழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிலிருந்து உபரி நீர் வியாழக்கிழமை மதியம் முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரியில், கொசஸ்தலை ஆற்றுநீர், பூண்டி ஏரியை ஒட்டியுள்ள ஆந்திர மலைப்பகுதிகள் மற்றும் தமிழக வனப்பகுதிகள் உள்ளிட்டவை அடங்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு வழங்கும் கிருஷ்ணா நீர் ஆகியவை சேமிக்கப்பட்டு, பிறகு கால்வாய்கள் மூலம் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஏற்கெனவே வந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில், புதன்கிழமை முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழை நீரின் அளவு வியாழக்கிழமை காலை முதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வியாழக்கிழமை பகல் 12 மணி நிலவரப் படி, பூண்டி ஏரிக்கு மழை நீர் விநாடிக்கு 3,400 கன அடி வந்து கொண்டிருந்தது. மேலும், கிருஷ்ணா நீர், ஆரணி ஆற்று நீர் விநாடிக்கு 460 கன அடி வந்து கொண்டிருந்தது. ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,914 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.29 அடியாகவும் இருந்தது.
எனவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில், விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீரை, நீர்வள ஆதாரத் துறையின் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அருண்மொழி முன்னிலையில், நீர்வளத் துறை களப்பணியாளர்கள் திறந்தனர். இந்நிகழ்வில், பூண்டி உதவி பொறியாளர் அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
5000 கனஅடியாக உயர்வு: தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து வந்ததால், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும், நீர் வரத்தின் அளவை பொறுத்து, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் படிபடியாக அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர், தாமரைப்பாக்கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கிமீ பயணித்து, எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும்.
ஆகவே, பூண்டி ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெளியேறுவதால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.90 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடி. தற்போது ஏரியில் 2903 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 5440 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
வெள்ளிக்கிழமையும் கனமழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பது வழக்கம். இதனால் நீர்வளத் துறை அதிகாரிகள் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து அலோசனை நடத்தினர்.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும்போது முறைப்படி அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதன் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும்” என்றனர்.