‘குழந்தைகளுக்கு சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம்’ கருத்து கேட்கிறார் கேரள கல்வித்துறை அமைச்சர்! | Social media addiction – kerala state taking new step

Spread the love

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்போவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க என்னச் செய்யலாம் என்பது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

“நவீன உலகில் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்று நமது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் நிலை குறித்து தீவிரமான விவாதம் தேவைப்படுகிறது.

உலகின் பல வளர்ந்த நாடுகளும், இந்தியாவின் பல மாநிலங்களும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளன. இணையதள அறிவிலும், மொபைல் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ள கேரளாவிலும் அதுகுறித்த கலந்தாய்வு மிகவும் பொருத்தமானதாகும்.

நண்பர்களுடன் ஓடி விளையாட வேண்டியது குழந்தைப் பருவம், இப்போது சிறிய மொபைல் ஸ்கிரீன்களுக்குள் அடங்கிப்போகிறது. அதிக நேரத்தை ஸ்கிரீனுக்கு முன்னால் செலவிடுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும், மன வளர்ச்சிகயையும் பாதிக்கும். குழந்தைகள் சமூகத்துடன் தொடர்பு ஏற்படாத மோசமான நிலையும் ஏற்படுத்துகிறது. டிஜிட்டல் ஸ்கிரீனுக்கு அடிமையான தலைமுறையால் நமது நாட்டின் எதிர்கால கட்டமைப்பு சவாலானதாக மாறும்.

அமைச்சர் சிவன்குட்டி

அமைச்சர் சிவன்குட்டி

அதற்காக இணையதளத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது நம் கருத்து அல்ல. அதன் பயன்பாட்டை அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு. இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்காக கடுமையான சோசியல் மீடியா கட்டுப்பாடு சட்டம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா. அல்லது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா. நம்முடைய குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்க அனைவரின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். பொது கல்வித்துறை அது குறித்து விரிவாக ஆய்வு செய்யும்.  அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *