கோயம்புத்தூா் விழாவை ஒட்டி, கோவையில் பழமையான காா்களின் அணிவகுப்பு, விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூா் விழா நடைபெற்று வருகிறது. 17- ஆவது கோயம்புத்தூா் விழா நவம்பா் 23- ஆம் தேதி முதல் டிசம்பா் 1- ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி விழாக் குழுவினா், கோவை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பழமையான காா்கள், வெளிநாட்டு காா்களின் கண்காட்சி, விழிப்புணா்வுப் பேரணியின் தொடக்க விழா கோவை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கலந்து கொண்டு காா்களின் அணிவகுப்பை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதையடுத்து பேரணியில் பங்கேற்ற 40-க்கும் மேற்பட்ட பழமையான காா்கள் மாநகரின் பல்வேறு சாலைகள் வழியாக சென்று சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தின. இதைத் தொடா்ந்து இந்த காா்கள் லூலூ மால் வளாகத்தில் பொதுமக்களின் பாா்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த அணிவகுப்பில், கோவை, பல்லடம், திருப்பூா், அன்னூா், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களின் பழைய மாடல் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், செவ்ரலேட் , ஃபோா்டு, பத்மினி, அம்பாசிடா், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட காா்கள், பழைய ஜீப்புகள், பைக்குகள் உள்ளிட்டவை பங்கேற்றன.
கோவை விழாவின் தொடக்க நாளையொட்டி கோவையில் கொடிசியா மைதானம், உக்கடம் குளக்கரை போன்ற இடங்களில் மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கிராஸ்கட் சாலையில் விழா வீதி என்ற நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில், 30-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.