சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, “எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு மணி நேரம் தேவை. இடையில் நான் பேசியிருக்கலாம். ஆனால் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்திருப்பது எந்த கூட்டணி. ஐயாவுக்கு அதிகாரம் கொடுத்து விட்டோம். ஐயா இப்போதே அறிவிப்பாரா… அடுத்த ஆண்டில் அறிவிப்பார் என ஆவலுடன் இருக்கிறீர்கள். நீங்கள் ஊர் திரும்பியதும், அங்கிருப்பவர்கள் கேட்பது எந்த கட்சியுடன் கூட்டணி என்று கேட்பார்கள். அந்த கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என சொல்லுங்கள். சின்ன பையன் கூட கேட்கிறான் 10.5 எப்போது வரும் கேட்கிறார்கள். அது நிச்சயம் வரும். ஒரு குழு, ஒரு கூட்டம், ஒரு கும்பல் அவர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள்தான், ஆனால் இப்போது மிக மோசமாக தூற்றுகிறார்கள். என்னையும் ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். சமீபமாக தூக்கமே இல்லை. அதையும் மீறி தூங்கும் போது என்னுடைய தாய் கனவில் வந்தார்கள்.
`ஏனப்பா இப்படி இருக்கிறீர்கள்…” என கேட்டார்கள். `உன்னுடைய பேரன்….(அழுதபடி பேசுகிறார்) ஒரு பையன் பதிவிடுகிறான், கழுத்தில் துணி போட்டு கொல்ல வேண்டும் என்று பதிவு போட்டவருக்கு அன்புமணி பதவி தருகிறார்.’ எனக் கூற, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றதற்கு, `உன் வளர்ப்பு அப்படி’ என்று தாய் கூறினார். சரிதான் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதையெல்லாம் செய்து விட்டேன். என்ன குறை வைத்தேன். எதுவும் இல்லை.
சென்னையில் ஒரு குடும்பத்தில் சொத்து தகராறு… தகப்பனை 30 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து விட்டான், ஒரு பிள்ளை. அப்படி செய்திருந்தால்கூட நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு நாளும், சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார். அவர்களுக்குப் பதவி கொடுத்ததும் என் தவறுதான். ஜி.கே.மணி நொந்து போய் சொல்கிறார், `ஒன்று நான் காணாமல் போய்விட வேண்டும். இல்லையென்றால் சாகத்தான் வேண்டும். 30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தற்கு இதுதான் நிலை’ என்றதும் எனக்கு கஷ்டமாகி விட்டது. இப்போது என்னை நேரடியாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சொந்தம்தான்… உறவினர்கள். அவர்கள் எல்லாம் எப்போதும் நேசிப்பவர்கள். மருத்துவர்களைப் போய் பார்த்தால், `அன்புமணி ஏன் இப்படிச் செய்கிறார். 5, 6 வருடங்கள் பொறுக்கக் கூடாதா?’ என நிறைய பேர் கேட்கிறார்கள். அவரை மாற்ற முடியாது என நான் சொல்லி விட்டேன். ஆனால் இப்போது நடக்கிற செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு எல்லாம் பார்க்கும்போது நூற்றுக்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 விழுக்காடு பேர்கூட இல்லை. ஆனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து வேலை செய்து வருகிறார்.
