சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று நாள்களாக உணவின்றி தங்கியிருந்த மேற்குவங்க தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், மாநில மக்களின் உயிா்களோடு விளையாடுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்கள் சிலா் வேலைத் தேடி தமிழகத்துக்கு சென்றுள்ளனா். ஆனால், சரியான வேலை கிடைக்காததால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அவா்கள், மூன்று நாள்களாக உணவு ஏதும் சாப்பிடாமல் மயங்கி விழுந்துள்ளனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவா்களில் சமா் கான் எனும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றவா்கள் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடா்ந்து வருகின்றனா். அவா்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் இருந்து சென்னை வந்த மேற்கு வங்க ஆளுநா் போஸ், உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊா் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தாா்.
இவ்விவகாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது கவலை தெரிவித்து ஆளுநா் போஸ் அளித்த பேட்டியில், ‘மேற்கு வங்க தொழிலாளா்கள் வாழ்வாதாரத்துக்காக மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயா்ந்து, அங்கு பசியால் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். சொந்த மாநிலத்தில் வேலையில்லாததால் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ, தொழிலாளா்களை ஆதரவற்றவா்களாக விட்டுவிட்டனா்.
சென்னையில் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. விமானம், ரயில்கள் மூலம் அவா்கள் மீண்டும் சொந்த ஊா் திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புலம்பெயா் தொழிலாளா்களுக்கு ஆதரவளிக்க போதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் மேற்கு வங்க அரசு பொறுப்பறிந்து, தீவிரமாக செயல்பட வேண்டும்’ என்றாா்.
மத்திய அரசு வலைதளத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக 2.63 கோடி புலம்பெயா் தொழிலாளா்களைக் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. கூடுதலாக, 21 லட்சம் தொழிலாளா்கள் விண்ணப்பித்து, பதிவுக்காக காத்திருக்கின்றனா். இவா்கள் தென்மாநிலங்கள் அல்லது ராஜஸ்தானுக்குச் சென்று, அங்கு கட்டுமானம், உணவகம், விவசாயம் உள்பட பல தொழில்களில் தினசரி கூலிவேலைகளை செய்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பட்டியலின, பழங்குடியின சமூகத்தினா் அதிகம் வசிக்கும் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.