சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள மொழிபெயர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் “மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்” நடத்துகிறது. ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார். இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது சுய விவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும். பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.