தமிழகத்தில் 3 ஆண்டில் அரசுத் துறைகளில் 68,039, தனியாரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு | In the last 3 years in TN, 68,039 youths have been employed in govt departments and 5 lakhs in private companies

1313976.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 , தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 பேருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 பேருக்கும் என மொத்தம் 68,039 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சுதந்திர தின விழா உரையின்போது முதல்வர் மு.க.ஸ்டலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 75 ஆயிரம் இளைஞர்களை பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.

தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளை ஒப்பிடும் போது காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301 என அறிவிக்கப்பட்டன. தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்பப்படும் போது,முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.

இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக 2 ஆண்டுகளுக்குள் முதல்வர் அறிவித்துள்ளபடி மேலும் 75ஆயிரம் இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழக இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்று தரும் பணியை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *