சென்னை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று சசிகலா குற்றம்சாட்டினார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களை இன்று (ஜன.1) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நிதி நிலை சரியில்லை என்று நான் அப்போதே சொன்னேன். இதை இப்போதுதான் திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத் தொகை தரப்படவில்லை.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினரே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வருகிறது. அதனால் அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் தொடக்கமே, அங்கு துணை வேந்தர் இல்லாததுதான். இதேபோன்று மேலும் 5 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள இடங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்துகிறது. ஆனால், மாநில மகளிர் ஆணையம் அங்கு செல்லவே இல்லை. இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 2026 தேர்தலில் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே இந்த புத்தாண்டு இலக்காக கொண்டிருக்கிறோம். அதுவே எனது முழு நேர பணியாக இருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு வேண்டிய நபர் ஒருவர், பெண்ணை கொலை செய்து கிணற்றில் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் என்ன ஆகப் போகின்றனர் என்று பாருங்கள்.
கடந்த தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதை எதையும் செயல்படுத்தவே இல்லை. திரும்பவும் 2025-ல் தங்களது வேஷத்தைப் போட தொடங்குவார்கள். ஆனால், அது தமிழக மக்களிடம் எடுபடாது. பொய் சொல்லி ஓட்டு வாங்குவது, தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, செய்ய முடியாத வேலையை செய்வோம் என்று வாக்குறுதி கொடுப்பது போன்ற செயல்களை செய்ய மாட்டேன். 2026 தேர்தலில் மக்கள் உரிய முடிவை எடுப்பார்கள்” என்று அவர் கூறினார்.