“திமுக கூட்டணி தொடரும்; அதுபற்றி இனி பேச வேண்டாம்” – திருமாவளவன் திட்டவட்டம் | The DMK alliance will continue; Don’t talk about it anymore – Thirumavalavan

1335713.jpg
Spread the love

திருச்சி: “மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விசிகவுக்கு இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக இனி பேச வேண்டாம்.” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று (நவ.5) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து அவர் அரியலூர் மாவட்டம் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கெனவே நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.

நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்தக் கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கெனவே பலமுறை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையற்ற நிலையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விசிகவுக்கு இல்லை. 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக இனி கேட்க வேண்டாம்.

சென்னையில் நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைந்து ஓராண்டு ஆகிறது. ஏற்கெனவே ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தது. விகடனும் ஆதவ் அர்ஜூனா நிறுவனமும் இணைந்து இந்தப் புத்தகத்தை கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டிருந்தனர்.

40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள் தான் இந்த புத்தகம். எல்லோருக்கும் அம்பேத்கர் என்ற தலைப்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள். தவெக மாநாட்டுக்கு முன்பாக விஜய்யை அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன்.

திராவிடத்தைப் பற்றி ஏற்கெனவே கருத்துச் சொல்லி உள்ளேன். திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதை விட வாழ்ந்தோம், வரலாறுப் படைத்தோம் என்பதுதான் முக்கியமான அரசியல். சாதியம்தான் நம்மை பிளவுபடுத்தியுள்ளது, வீழ்த்தியுள்ளது. அதனை எதிர்க்க வேண்டுமென்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும்; அதிலிருந்து முற்றாக மாற்றம் செய்ய வேண்டும்.

திராவிடம் என்பது கருத்தியல். நிலப்பரப்பை குறிப்பது அல்ல. அது ஒற்றை மொழி அல்ல; தேசிய இனம் என்று சொல்ல முடியாது நிலமாகவும் இல்லை. கற்பனை செய்து கொண்டு அதன் நிலப்பரப்பு எல்லை என்று சொல்வது கற்பனை வாதம். திராவிடம் என்பது கருத்துகள். சாதியத்துக்கு எதிராக பேசிய அரசியல். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திராவிடக் கருத்தியல் இல்லை என்றால் சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும். இந்தி தமிழை விழுங்கி இருக்கும். திராவிடம் என்ற பெரிய கருத்தியல் இல்லாமல் இருந்தால் சம்ஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழ் இனம் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் திராவிட கருத்தியல் தான், என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது திருச்சி கரூர் மண்டல விசிக செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைவேந்தன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *