இதற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 10 இன்ஸ்பெக்டர்கள் மாறி விட்டனர். இவர்கள் யாரும் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், “குற்றம் புரியும் நோக்குடன் சிலர் கூடியிருந்தனர் என்று வழக்கு பதிவு செய்யும்போது அதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் 8 ஆண்டுகளாக விசாரணை நடத்தவில்லை, 2017-ல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை 24.6.2025-ல்தான் நீதிமன்றத்துக்கே அனுப்பியுள்ளனர். இது பொய் வழக்கு என்று தெரிவதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்வது மட்டும் மனுதாரருக்கு முழுமையான நீதியை வழங்காது.
ஒருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் நற்பெயருக்கு களங்கம், சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு இழப்பு, உறவுகளில் பிரச்சனை, உளவியல் சிக்கல் ஏற்படுகிறது.
போலீஸாரின் அதிகார மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது என ஐநா அறிவித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சத்தை தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும், இதை சம்பந்தப்பட்ட போலீஸாரிடமிருந்த வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.