ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai condemns Minister Sekarbabu over the issue of devotees waiting at Srirangam Ranganathar Temple.

1346631.jpg
Spread the love

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட்ட பரமபதவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்து கொண்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்றைய தினம் அதிகாலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின், பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வுக்காக, ஆண்டுதோறும் கோயிலுக்குள் சென்று சொர்க்கவாசல் கடக்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை.

இந்த ஆண்டும் பெருவாரியான பக்தர்கள், இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ள, கட்டணம் செலுத்தி, நடுநிசியிலிருந்தே காத்துக்கொண்டிருக்கையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவருடைய குடும்பத்தினருடன் வந்ததால், பக்தர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்திருக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்த பக்தர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் விரட்டியிருக்கிறார்.

அமைச்சர் சேகர்பாபுவின் குடும்பம், ஒரு புண்ணிய தினத்தன்று கோயில் நிகழ்வில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

உடலில் எண்ணெய்யைப் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற பழமொழியை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு புண்ணிய தினத்தன்று, பகவான் சன்னிதியில் அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *