அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.
சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.
இதில் வாஷிங்டன் ஃபீரிடம் என்ற அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். முதல் பிளே ஆஃப் சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது வாஷிங்டன் அணி.
எலிமினேட்டரில் வென்ற டிஎஸ்கே அணி குவாலிஃபையரில் தோற்ற சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 20 ஓவர் முடிவில் 200/6 ரன்கள் எடுத்தது. ஃபின் ஆலன் 52 பந்தில் சதமடித்து அசத்தினார். இங்கிலீஷ் 37 ரன்கள், ஹாசன் கான் 27 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து ஆடிய டிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 190/4 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதிகபட்சமாக கான்வே 62, டு பிளெஸ்ஸி 45, ஜோஷுவா 56 ரன்களும் எடுத்தார்கள்.
இதனால் சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி மீண்டும் இறுதிப் போட்டியில் வாஷிங்டன் ஃபிரீடம் அணியை எதிர்கொள்கிறது. பிளே ஆஃபில் தோற்றதற்காக வாஷிங்டன் ஃபிரீடம் அணியை பழிவாங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.