புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் கடலூர் – புதுச்சேரி சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையை கடந்தது. புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் இடைவிடாது பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளக்காடானது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் உடைந்து சரிந்தன. குறிப்பாக கனகன் ஏரிக்கரை அருகே உள்ள மருது நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் மேல் தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கோவிந்தசாலை குபேர் நகர், அந்தோணியார் வீதி உள்ளிட்ட உப்பனாறு வாய்க்காலை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கும் விரைந்து பொதுமக்களை படகு மூலம் மீட்டனர்.
தொடர் மழையினால் லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீகல்ஸ் கன்வென்ஷன் சென்டர் போன்ற பகுதிகளில் மதில்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் லாஸ்பேட்டை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அலுவலகம், நாவலர் அரசு பள்ளி, லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கிழக்குகடற்கரை சாலை கொக்கு பார்க் சிக்னல் அருகே புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் சாலையில் விழுந்தது நெறுக்கியது. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் மாநில அவசர கட்டுபாட்டு அறை மழைநீரால் சூழப்பட்டுள்ளது.
நேற்றிரவு அடித்த சூறைக்காற்றால் 2-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கும் பணி, சாலையில் விழுந்த 100-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்தும் பணி, அறுந்து விழுந்த மின் கம்பிகள், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரிடர் மீட்புப் படையினர், துணை ராணுவத்தினர், தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். கடலூர் – புதுச்சேரி சாலையில் கிருமாம்பாக்கம் – பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மழைநீருடன் சாலையோர வாய்க்கால் கழிவுநீர் கலந்து இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கிருமாம்பாக்கம் மற்றும் கன்னியக்கோயில் பகுதிகளில் சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பணி நிமித்தம், மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக இரு பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல் பல இடங்களில் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாகூர், கரையாம்புத்தூர் போன்ற இடங்களிலும் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் நெல் உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளது.
30 ஆண்டுகளில் அதிகமான மழை பதிவு: புதுச்சேரி வரலாற்றிலேயே 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்சமாக நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் 48.4 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஒரே நாளில் 21 செ.மீ., மழை பெய்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.