புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக இன்று அறிவிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார் 50 செ.மீ மழை பொழிந்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ரூ.600 கோடி முதல்கட்ட நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், வருவாய்த் துறை சிறப்பு செயலர் குலோத்துங்கன் வெளியிட்ட உத்தரவில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.