பெரம்பலூர்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிப் பயிர்கள் சேதமடைந்தன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துக்கொண்டிருந்தது. அவ்வ்ப்போது வேகமான காற்றுடன் பலமாகவும், பெரும்பாலான நேரம் தூறலாகவும் மழை இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. காட்டாறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் வேப்பந்தட்டை, மலையாளப்பட்டி, அரும்பாவூர், அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம், தழுதாளை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம், கரும்பு, மரவள்ளி கிழங்கு பயிர்கள் சேதமடைந்தன.
சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அறுவடை நெருங்கும் பருவத்தில் உள்ள மக்காச்சோளம் பயிர்கள், பின் பருவத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் காற்றில் உடைந்து சரிந்து விழுந்தன. இதேபோல் 3 அல்லது 4 மாதம் கொண்ட கரும்பு பயிர்களும் உடைந்து சரிந்து கிடக்கின்றன. மரவள்ளி கிழக்கு பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், மண் அரித்துச் செல்லப்பட்டு சரிந்தும் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. நீலகண்டன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, “பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பாதிப்புகளின் தன்மைக்கேற்ப அரசிடமிருந்து நிவாரணத் தொகை பெற்று வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.