அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு | Transport pensioners to protest tomorrow demanding dearness allowance and gratuity arrears

1345055.jpg
Spread the love

மதுரை: அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நாளையும், நாளை மறுநாளும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் கர்சன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் 30, 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணி ஓய்வுக்குப் பின் மறைந்த தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியர்கள் என 96 ஆயிரம் குடும்பங்களின் கோரிக்கைகள் கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

சட்டப்படியான ஓய்வூதியத்தின் ஒரு பகுதியான அகவிலைப்படி உயர்வு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடு தாக்கல் செய்து அதனைத் தாமதப்படுத்தி வருகிறது.

தமிழக அரசின் அனைத்துதுறை ஊழியர்களுக்கும் முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது சமூக அநீதியாகும். சேமநல நிதி வழக்கிலும் தொழிலாளர்களுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பிறகும், அரசு மேல்முறையீடு செய்து வஞ்சித்து வருகிறது.

பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சட்டப்பூர்வ பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றிய அரசே, அந்த சட்டத்தை மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்காமல் உள்ளது.

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ள போது தொழில் ரீதியாக பலவித நோய்களுடன் தவிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இப்போது வரை காப்பீடு திட்டம் இல்லை. குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியும் வழங்குவதில்லை.

2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கோரிய வழக்கில், இறந்த தொழிலாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள போது அதை மதிக்காமல் அரசு மேல்முறையீடு செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை தெருவில் நிறுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு வேலை வழங்காததால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய போது எதிர்க்கட்சியான திமுக, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நூறு நாள் கடந்தும் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

எனவே, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பிரச்சினையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், முதல்வர் மவுனம் கலைக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் கோட்ட, மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *