அக்.29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Voters list revision camp starts from Oct.29: Satyabrata Sahoo

1296262.jpg
Spread the love

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேச , ஓரளவு மறுசீரமைத்து வாக்குச் சாவடிப் பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்.29ம் தேதி வெளியிடப்பட்டு அன்றிலிருந்து நவ.28ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்.29 முதல் நவ 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். முகவரிச் சான்றாக, முகவரிக்கான நீர், மின்சாரம், சமையல் கேஸ் இணைப்பு, ஆதார், வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, விவசாயி புத்தகம், பதிவுசெய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

வயதுக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ், ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதியுடன் கூடிய 10ம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச் சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25- வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். மேலும், https://voters.eci.gov.in/, <https://voterportal.eci.gov.in/> ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்கள் படிவம் 6-லும், வெளிநாடு வாழ் வாக்காளர் படிவம் – 6ஏ, ஆதார் இணைத்தல் – 6பி, பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், பெயர் நீக்கத்துக்கும் படிவம் -7, குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ, வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ, நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கோ படிவம் 8 ஐபயன்படுத்தலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *