கத்திரிக்காய் (கோழி) குழம்பு
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (இரண்டாக நறுக்கவும்)
நசுக்கிய பூண்டு பற்கள் – 5
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் சிறு துண்டு களாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் நறுக்கிவைத்துள்ள கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கலவையை வேகவிடவும். கலவை நன்கு வெந்ததும் இதனுடன் மிளகுத்தூள் மற்றும் நசுக்கிய பூண்டு பற்களைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு குழம்புப் பதத்தில் இறக்கவும்.
குறிப்பு: செட்டிநாட்டு பகுதிகளில் கோழிக் குழம்பு செய்யும்போது புளி சேர்ப்பதில்லை. அதேபோல இந்தக் கத்திரிக்காய் (கோழி)குழம்பும் புளி இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் உணவுகள் சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவும்.