‘அச்சம் தரும் சீமான் பேச்சு’ – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல் | Naam Tamilar Katchi State Coordinator jagadesan pandian resigns

1349111.jpg
Spread the love

சென்னை: நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதில், “நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய 5 பக்க கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “சமீபகாலமாக நீங்கள் நேர்காணல்களிலும் மேடை பேச்சுகளிலும் உங்கள் பேச்சு கட்சியின் நோக்கத்தில் இருந்து விலகி, இந்தத் தமிழ் சமூகம் அடிமைப்பட காரணமாக இருந்த கருத்தியலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளாகியும், கட்சியின் அமைப்பை கட்ட நீங்கள் கவனம் செலுத்தவில்லை. நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள், உங்களுக்கு வலிய வந்து ஆதரவு கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கருத்துக்கெல்லாம், சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தெரிவிக்கவில்லை. கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி அது அதிகாரமாக மாற, உங்களிடமிருந்த எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது.

நாதகவில் எந்த ஜனநாயகமும் இல்லை. வலதுசாரி அதரவு கருத்துக்கு சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரசாந்த் கிஷோரை விட பாண்டே அறிவுமிக்கவர் என்றும், பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள். ஒருபோதும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை இப்போது நீங்கள் கைகோத்திருக்கும் (வலதுசாரி) சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியாது. எனவே கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். சமீப காலமாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் கூண்டோடு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *