மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீஸார் விசாரித்தபோது உயிரிழந்தார். இது தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், “அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அஜித்குமார் குடும்பத்துக்கும், போலீஸாரால் தாக்கப்பட்ட நவீன், அருண், பிரவீன் ஆகியோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: : அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கைப்போல, அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆக. 20-ல் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். முக்கிய சாட்சிகளான நவீன், அருண், பிரவீன், சக்தீஸ்வரன் ஆகியோருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கக் கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது சிவகங்கை மாவட்ட நீதிபதி ஒரு வாரத்தில் விசாரித்து, 4 பேருக்கும் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.
காவல் மரணம் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அஜித்குமார் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு தரப்பில் ஏற்கெனவே ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.25 லட்சத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் பெறலாம். விசாரணை ஆக. 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.