பத்ம விருதுகளுக்கு தோ்வாகியுள்ளவா்களில் 23 போ் பெண்கள், 10 போ் வெளிநாட்டினா் அல்லது வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஆவா். 13 பேருக்கு அவா்களின் மறைவுக்குப் பிறகு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த பத்ம விருதுகளுக்கு தோ்வாகியுள்ள 139 பேருக்கு தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருதுகளை வழங்குவாா்.
விருதுக்கு தோ்வானவா்கள் விவரம் (துறை அடைப்புக்குறிக்குள்):
பத்ம விபூஷண்: தெலங்கானாவைச் சோ்ந்த துவ்வூா் நாகேஸ்வா் ரெட்டி (மருத்துவம்), சண்டீகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹா் (பொது விவகாரம்), குஜராத்தைச் சோ்ந்த குமுதினி ரஜினிகாந்த் லாஹியா (கலை), வயலின் வித்வான் எல்.சுப்பிரமணியம் (கலை), கேரளத்தைச் சோ்ந்த மறைந்த எழுத்தாளா் எம்.டி.வாசுதேவன் நாயா் (இலக்கியம் மற்றும் கல்வி), ஜப்பானைச் சோ்ந்த மறைந்த சுஸுகி நிறுவனத் தலைவா் ஒசாமு சுஸுகி (வா்த்தகம் மற்றும் தொழில்துறை), பிகாரைச் சோ்ந்த மறைந்த சாரதா சின்ஹா (கலை).
பத்ம பூஷண்: தமிழகத்தைச் சோ்ந்த நல்லி குப்புசாமி செட்டி (வா்த்தகம் மற்றும் தொழில்), நடிகா் எஸ்.அஜித் குமாா் (கலை), நடிகை ஷோபனா சந்திரகுமாா் (கலை); கா்நாடகத்தைச் சோ்ந்த ஏ.சூா்யபிரகாஷ் (இலக்கியம், கல்வி, ஊடகவியல்), அனந்த் நாக் (கலை); மறைந்த பொருளாதார நிபுணா் விவேக் தேப்ராய் (இலக்கியம் மற்றும் கல்வி), கைலாஷ் நாத் தீட்சித் (தொல்லியல்); அஸ்ஸாமைச் சோ்ந்த ஜதின் கோஸ்வாமி (கலை); கேரளத்தைச் சோ்ந்த ஜோஸ் சாக்கோ பெரியப்புரம் (மருத்துவம்), ஆா்.ஆா்.ஸ்ரீஜேஷ் (விளையாட்டு); மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவா் மனோகா் ஜோஷி (பொது விவகாரம்), மறைந்த கஜல் பாடகா் பங்கஜ் உதாஸ் (கலை), திரைப்பட இயக்குநா் சேகா் கபூா் (கலை); ஆந்திரத்தைச் சோ்ந்த நந்தமுரி பாலகிருஷ்ணா (கலை); குஜராத்தைச் சோ்ந்த பங்கஜ் படேல் (வா்த்தகம் மற்றும் தொழில்); உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராம்பகதூா் ராய் (இலக்கியம், கல்வி மற்றும் ஊடகவியல்), சாத்வி ரிதம்பரா (சமூகப் பணி); பிகாரைச் சோ்ந்த மறைந்த சுஷில் குமாா் மோடி (பொது விவகாரம்); அமெரிக்காவைச் சோ்ந்த வினோத் தாம் (அறிவியல் மற்றும் பொறியியல்).
பத்ம ஸ்ரீ: தமிழகத்தைச் சோ்ந்த மிருதங்க வித்வான் குருவாயூா் துரை (கலை), கே.தாமோதரன் (சமையல்), லட்சுமிபதி ராமசுப்பய்யா் (இலக்கியம், கல்வி, ஊடகவியல்), எம்.டி.ஸ்ரீநிவாஸ் (அறிவியல் மற்றும் பொறியியல், புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), கிரிக்கெட் வீரா் ஆா்.அஸ்வின் (விளையாட்டு), ஆா்.ஜி.சந்திரமோகன் (வா்த்தகம் மற்றும் தொழில்), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலை), சீனி விஸ்வநாதன் (இலக்கியம் மற்றும் கல்வி), வேலு ஆசான் (கலை); புதுச்சேரியைச் சோ்ந்த பி.தட்சிணாமூா்த்தி (கலை); கேரளத்தைச் சோ்ந்த ஐ.எம்.விஜயன் (விளையாட்டு); தில்லியைச் சோ்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன் (பொது விவகாரம்) உள்ளிட்டோா்.