இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
அஜித் குமார்: நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது ஒரு கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து ‘ஆசிய லீ மான்ஸ்’ தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நரேன் கார்த்திகேயன்: எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும். இப்போது அவர் தொழில்முறையில் கார் பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன் சேர்ந்து பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளனர்.
யார் இந்த நரேன் கார்த்திகேயன்?
உலகளவில் கார் பந்தய போட்டியின் மீது கவனமும் ஆர்வமும் இருந்தாலும் இதை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக நரேன் கார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.
உலகளவில் பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போட்டிகளில் முதலிடம் வென்று கார் பந்தயத்தில் இந்தியாவின் முத்திரையைப் பதித்த நரேன், 2005 ஆம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற ஃபார்முலா – 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றதுடன் அப்போட்டியில் 18 ஆம் இடம் பிடித்தார்.
சமீபத்தில், நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கையைத் திரைப்படமாக உள்ளதாகவும், இதை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.