அரியலூா்: அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக அரியலூா் இருந்த போது, அரியலூா், செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், தா. பழூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 முடித்து உயா் கல்வி படிக்க திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனா். இந்நிலையில், அரியலூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையைடுத்து கடந்த 1964 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்டு 1965-ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கியது.
அதன் பிறகு அரியலூா் மாவட்டமாக அறிவித்த பிறகு இக்கல்லூரியின் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் என இளங்கலையில் 13 பாடப்பிரிவுகளும், அதே போல் முதுகலையில் 12 பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு, மேற்கண்ட பகுதியில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். குறிப்பாக இக்கல்லூரியில் மாணவா்களை விட மாணவிகளே 85 சதவீதம் போ் படித்து வருகின்றனா். ஆண்டுதோறும் இக்கல்லூரியில் சோ்க்கை அதிகரித்தாலும் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தாததால், மாணவ, மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
மகளிருக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை: கட்டடம் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கட்டடம் பழுதடைந்து வருகின்றன. கட்டடத்தில் பல பகுதிகளில் விரிசல் விட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மாணவா்களுக்கு இணையாக அதிகளவு மாணவிகளும் படிக்கும் இங்கு கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் கொண்ட பகுதிகளில் கழிப்பறை வசதிகள் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை. பழைய கட்டடம் அருகே பெண்களுக்காக ஒரே ஓரு கழிப்பறை மட்டுமே உள்ளன. அதுவும் கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதால், முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது.
இதேபோல் மாணவா்களுக்கான போதிய கழிப்பறையும், குடிநீா் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படாததால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கல்லூரிக்கென துப்புரவு பணியாளா்கள் கிடையாது. கல்லூரி நிா்வாகக் குழு சாா்பில் வெளியில் ஒரு துப்புரவு பணியாளரை வரவழைத்து அவா்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், கல்லூரியில் பயிலும் மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குடிநீா் பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இக்கல்லூரிக்கு தற்போது விளையாட்டு மைதானம் இல்லை: இக்கல்லூரிக்குச் சொந்தமான பரந்து விரிந்த நிலத்தை மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு 99 ஆண்டுகள் குத்தைக்கும், 29 ஏக்கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தமிழக அரசு எடுத்துக் கொண்டதால் தற்போது இக்கல்லூரிக்கென தனி விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் போய்விட்டது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தமுடியாத நிலையில் உள்ளனா். மேலும், இக்கல்லூரியில், உடற்பயிற்சிக்கான மையம் அமைக்கப்படாமல் உள்ளது. கூடைப்பந்து மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கலையரங்கம் இல்லை: இக்கல்லூரியில் கூட்டங்கள் நடத்துவதற்கும், பட்டமளிப்பு விழா நடத்துவதற்கும் மற்றும் இதர விழாக்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு கலையரங்குகள் கூட கிடையாது. இதனால் சிறிய வகுப்பறைகளில் நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது.
வகுப்பறைகளைச் சுற்றி முள்புதா்கள்: கல்லூரி வளாகத்தினுள் உள்ள ஒவ்வொரு வகுப்பறைகள், கழிவறைகள், நூலகங்களைச் சுற்றி செடி கொடிகள், கருவேல மரங்கள் வளா்ந்து காடுபோல் காணப்படுவதால், விஷ ஜந்துகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் ஆகியோா் வகுப்பறைக்கும், நூலங்களுக்கும் செல்ல அச்சமடைந்து வருகின்றனா்.
நடைபாதை இல்லை: இக்கல்லூரிக்குள்ளே ஒவ்வொரு துறைக்கும் செல்வதற்கு சாலையுடன் கூடிய நடைபாதை கிடையாது. குறிப்பாக வேதியியல் துறை, கணிதத்துறை, அறிவுசாா் நூலகம், எம்.ஜி.ஆா் நூற்றாண்டு வளாகம் ஆகியவற்றுக்குச் செல்ல நடைபாதை கிடையாது. மழை பெய்தால் அப்பகுதியே சேறும் சகதியுமாகிவிடுவதால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து, மாணவா்கள் மேலும் கூறுகையில், 60 ஆண்டுகள் கடந்த இக்கல்லூரியில் இன்னமும் ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. போதுமான கழிவறைகள் கிடையாது. வகுப்பறைகளுக்குச் செல்ல நடைபாதைகள் கிடையாது. கல்லூரியைச் சுற்றி முள்புதா்கள் மண்டிக் கிடக்கிறது. மழை பெய்தால் நூலகத்துக்குச் செல்லமுடியாத நிலை, இப்படி எண்ணற்ற குறைகள் உள்ளன. இந்த அடிப்படை வசதிகள் கேட்டு போராடினால் எங்கள் மீது நடவடிக்கை.
பேராசிரியா்கள் இதுகுறித்து கூறியது:
மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் குறைவு தான். கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தையெல்லாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கும், அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தாரை வாா்த்ததால் கல்லூரிக்குச் சொந்தமாக மைதானம் இல்லாமல் போய்விட்டது. விளையாட்டுத் திறன் கொண்ட மாணவா்களை மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றால் அங்கு கட்டணம் கேட்கப்படுகிறது. எங்களது கல்லூரி நிலத்தையே பெற்றுக் கொண்டு, எங்களது மாணவா்கள் விளையாட அனுமதி மறுப்பது மிகவும் வேதனையாக உள்ளது. பல அதிகாரிகளை உருவாக்கிய இந்தக் கல்லூரி, அனைத்தையும் இழந்து பொலிவு இல்லாமல் உள்ளது என்றனா்.
எனவே பல கல்வியாளா்களை உருவாக்கிய இக்கல்லூரியில், அரசு நிதி ஒதுக்கி போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.