அடுத்த அதிர்ச்சி: கேரளாவில் இருந்து தெரு நாய்களை கடத்தி குமரியில் விட முயற்சி! | Attempt to drop stray dogs in Kanyakumari from Kerala

1354931.jpg
Spread the love

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி எல்லைகளில் கொட்டப்படுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தற்போது கேரளாவில் இருந்து தெரு நாய்களை குமரியில் எல்லையில் கொண்டு விடும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து இன்று 20-க்கும் மேற்பட்ட நாய்களை குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வேனில் ஏற்றிக் கொண்டு விட ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் நாய்களை அந்த கும்பல் அவிழ்த்து விட்டுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கி பிடித்து அவர்களை சிறை பிடித்தனர். மேலும் அவர்களால் அங்கு விடப்பட்ட தெரு நாய்களை அவர்களை வைத்து மீண்டும் பிடிக்க வைத்தனர்.

இது குறித்து களியல் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குமரி மாவட்ட எல்லை பகுதியான நெட்டா சோதனைச் சாவடி வழியாக நாய்களைக் வேனில் கொண்டு வந்துள்ளனர். நாய்களுக்கு ஊசி போடுவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்குப் பணியில் இருந்த போலீசாரும் விடுவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் குமரி எல்லையில் கொட்டப்படுவதை தொடர்ந்து, குமரி எல்லை பகுதியில் நாய்களை கொண்டு விட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து நாய்களைக் வேனில் கொண்டு விட முயன்றவர்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் அபராதம் கடையால் பேரூராட்சி நிர்வாகம் விதித்தது.

மேலும், பிடிப்பட்ட நபர்களிடம் நாய்கள் திருவனந்தபுரத்தில் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து களியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் கேரள மாநிலத்தில் இருந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களையும் வானங்களில் ஏற்றி குமரி மாவட்ட எல்லைகளில் விடுவது பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *