மயிலாடுதுறை: அடுத்த முறையும் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் தொடர வேண்டும் என்று மதுரை ஆதீன கர்த்தர் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோயிலில், நன்கொடையாளர் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்ட விழா நேற்று நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், ஸ்ரீ சிவபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது: இங்கு ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்துவிட்டன. ஆன்மிக அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், எல்லாம் சந்நிதானங்களையும் ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்கு உண்டு. நிறைய கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார்கள். நல்ல முறையில் முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆட்சி தொடர வேண்டும். ஆதீனங்களுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். அதேபோல, மத்திய அரசுடன் கொஞ்சம் இணக்கமாகச் செல்ல வேண்டும். அப்போதுதான் நிதியைப் பெற முடியும். பிரதமர் நல்ல மனிதர். அகில உலகமும் அவரைப் பாராட்டுகிறது. அவருடன் கொஞ்சம் இணக்கமாகச் செல்லுங்கள்.
அடுத்த முறையும் மத்தியில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் தொடர வேண்டும். நான் எல்லா கட்சிக்கும் பொதுவான நபர். நல்ல காரியங்களை யார் செய்தாலும் பாராட்டுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
மனம் கோணாமல்… அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, “முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 10,899 கோயில்களுக்கு குடமுழுக்குக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் 34 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை ஆன்மிக ஆட்சி என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது? இதேபோல, பல்வேறு கோயில்களுக்கு தங்க, வெள்ளி ரதங்கள் செய்யப்பட்டுள்ளன. தருமபுரம் ஆதீனம் தொடர்ந்து எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் அறநிலையத் துறை தொடர்ந்து பயணிக்கும்” என்றார்.