சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (செப்.28) முதல் அக்.3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதுச்சேரியிலும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.