அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு | One-day stoppage of piped water supply in Adyar, Perungudi, Sholinganallur

1336142.jpg
Spread the love

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றப்படுவதால், விஜிபி வளாகம் எதிரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரம் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரை சாலை (ECR) 6 வழி சாலையாக மாற்றப்படுவதால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் விஜிபி வளாகம் எதிரில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (அக். 6) மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை (24 மணி நேரம்) அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட திருவான்மியூர், பெசன்ட் நகர், கலாசேத்திரா காலனி, இந்திரா நகர் (பகுதி), கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *