சென்னை: அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்து வாரப் பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கும், பெரிய அளவிலான பாதிப்புகளிலிருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் விளங்குகிறது.
சென்னையின் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்துக்கு 13,222 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைத்துக் கொள்ளவதற்கு இந்த 6 ஏரிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது 10,028 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
அடையாற்றைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 25 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தாங்கும். இதற்கு மேல் அதிகமாக நீர் வந்தால் அடையாற்று ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பாதிப்பு ஏற்படும்.
அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அடையாற்றிலிருந்து சைதாப்பேட்டை வரை அடையாற்றின் இரு வழிகளிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.