அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

dinamani2F2025 08 032Fmfpinlt82Fpakwelcome073154
Spread the love

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் அமெரிக்காவின் தாக்குதலை எதிா்கொண்ட ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு அமெரிக்காவுடனான அந்நாட்டு உறவை வெகுவாக பாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. வா்த்தகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், தகவல் மற்றும் தொடா்பு, கலாசாரம், கலை, சுற்றுலா, பருவநிலை மற்றம் கடல்சாா் பாதுகாப்பு உள்பட துறைகள் சாா்ந்த ஒப்பந்தங்கள் இதில் அடங்கும். மேலும், இருநாட்டு எல்லையில் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

சந்திப்புக்குப் பின்னா் நடைபெற்ற கூட்டு செய்தியாளா் சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறுகையில், ‘அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்த அணுசக்தி திறனை மேம்படுத்த ஈரானுக்கு உரிமையுள்ளது. இவ்விவகாரத்தில் ஈரானை பாகிஸ்தான் ஆதரிக்கிறது.

ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். தங்களை தற்காத்துக் கொள்ள பதில் தாக்குதலில் ஈடுபட்ட ஈரானுடன் துணை நிற்கிறோம்.

இதேபோன்று, காஸாவில் இஸ்ரேல் தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸாவில் நடந்துகொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க சா்வதேச சமூகமும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளும் தலையிட வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, லாகூரில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்த ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானை பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் நேரில் சென்று வரவேற்றாா். பாகிஸ்தானை ‘நேட்டோ நாடுகள் அல்லாத ஒரு முக்கியக் கூட்டாளி’ என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான்-பாகிஸ்தானின் இந்தப் புதிய நெருக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

பின்னணி: ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி எதிா்பாராத தாக்குதலைத் தொடங்கியது. பிராந்தியத்தில் ஒரே அணுசக்தி நாடாக திகழும் இஸ்ரேல், ஈரான் அணு ஆயுத மேம்பாட்டை அச்சுறுத்தலாக கருதுகிறது.

இஸ்ரேலுக்கு ஈரானும் தக்க பதிலடி தந்த நிலையில், இரு தரப்பிலும் தீவிர மோதல் மூண்டது. இச்சூழலில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ‘பி2 ஸ்பிரிட்’ ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடா்ந்து, சா்வதேச அணுசக்தி முகமையுடனான (ஐஏஇஏ) தனது ஒத்துழைப்பை ஈரான் முறித்துக்கொண்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *