அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான போர் கொள்கையில் திருத்தம் செய்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மாஸ்கோவில் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் புதன்கிழமை முக்கிய ஆலோசனையில் புதின் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையின் முடிவில், எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ரஷியாவின் கொள்கையில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்
ரஷியா மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு அணு ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்கினால், கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள், கப்பல் மற்றும் டிரோன்கள் மூலம் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை ரஷியா மீது நடத்தும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்களை கொண்டு, உக்ரைனுக்குள் நுழையும் ரஷியப் படைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இந்த விதிகளை தளர்த்தி, ரஷியாவுக்குள் நுழைந்து ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.