“காவிரி ஆறு – தமிழரின் உயிர்நாடி
நீர் – இயற்கையின் உயிர்த்துளி!
அது மனிதனுக்கு மட்டுமே அல்ல, பூமியில் உள்ள 8.75 மில்லியன் உயிரினங்களுக்கும் உயிர் ஆதாரம்.
“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவத்தின் சொல், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் வாழ்வின் அச்சாணி. புல்லின் நுனியில் துளிர்க்கும் பசுமை முதல் மனிதனின் உணவு, பண்பாடு, செழிப்பு அனைத்திற்கும் நீரே அடித்தளம்.
தமிழர் பண்பாட்டில் நீர் புனிதமானதாகக் கருதப்பட்டது. சங்க கால மக்கள் நீர் மேலாண்மையில் வல்லவர்கள். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் தோண்டி நீரைத் தேக்கி, அதை பாதுகாக்கும் அறிவு அவர்களிடம் இருந்தது. இலக்கியங்களில் நீரின் அழகு, புனிதம், தண்ணீரின்றி வாழ்வின் துயரம் அனைத்தும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடபுலவியனார், பாண்டிய அரசனிடம் “நீர் வளம் பெருக்குவதே அரசனின் கடமை” என்று அறிவுறுத்திய பாடல், அதற்குச் சான்று.
இந்தச் சூழலில் தென்னிந்தியாவின் பெருமையான “காவிரி ஆறு”, தமிழரின் உயிர்நாடியாக விளங்கியது. பட்டினப்பாலை முதல் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் வரை `காவிரி’ இலக்கியங்களில் புனித நதியாகப் போற்றப்பட்டாள்.
அவளது ஓசை, பசுமை, செழிப்பு – அனைத்தும் தமிழரின் வாழ்வுடன் இணைந்திருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காவிரியின் பெருக்கை அடக்கி, அதன் அருளை வருடம் முழுவதும் நிலத்துக்கு சீராக வழங்க வேண்டும் என்ற எண்ணமே “மேட்டூர் அணைத் திட்டத்தை” உருவாக்கியது.
1925 ஜூலை 20 அன்று பணிகள் தொடங்கின; ஒன்பது ஆண்டு உழைப்பின் பின், 1934 ஆகஸ்ட் 21 அன்று அணை திறக்கப்பட்டது. இந்த அணை கல், கான்கிரீட் மட்டுமல்ல — தமிழனின் கனவுகளின் வடிவம், மக்கள் தியாகத்தின் சின்னம், மனித உழைப்பின் வெற்றி!