கோவை: அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அவர் பெரிதும் முயற்சிக்கிறார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஆதாய அரசியல்.
குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள சூழலில் இவ்வாறு அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. அண்ணாமலை லண்டன் சென்று வந்த பின் என்ன ஆனது என தெரியவில்லை. அவர் ஏன் செருப்பு அணிய மாட்டேன். சாட்டையால் அடித்து கொள்வேன் போன்ற முடிவை எல்லாம் எடுக்கிறார். இது வருத்தம் அளிக்கிறது.
தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சா வழி முறை என்பது காந்தியடிகளைப் பின்பற்றுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவியின் விவரங்கள் வெளிவந்திருக்கக் கூடாது. கண்டனத்திற்குரியது அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு நோக்கம் உள்ளது. தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நஷ்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நாங்கள் யாரையும் மிரட்டும் நிலையில் இல்லை. எங்களையும் யாரும் மிரட்டும் நிலைமையில் நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.