மாநாட்டின் பிரமாண்ட நுழைவு வாயிலில் தொடங்கி மேடை வரை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோரின் பேனர்கள் நீக்கமற நிறைந்திருந்தன. அதேவேளையில், அக்கட்சியின் முன்னோடிகளான பெரியார் அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்கள் கண்களில் தென்படும் அளவிற்கு கூட இல்லை என்பது மூத்த நிர்வாகிகளின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், ” தி.மு.க மாநாடு என்றாலே தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிரமாண்ட பேனர்கள் தான் அடையாளமாக இருக்கும். ஆனால், இந்த மாநாட்டில் எந்தவொரு பேனரிலும் அண்ணாவும் இல்லை, பெரியாரும் இல்லை. மேடையில் மாலை அணிவிக்கப்பட்ட உருவப்படங்கள் மற்றும் ஒரே இடத்தில் ஸ்டாம்ப் சைஸ் படங்களைத் தவிர வேறு எங்கும் கழக முன்னோடிகளின் படங்களை பார்க்க முடியவில்லை. தலைவர் ஸ்டாலினைவிட உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வகையில் மட்டுமே மாநாட்டு ஏற்பாடுகளை செய்து பேனர்களால் நிரப்பியிருக்கிறார்கள்” என்றனர்.