அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் வரும் 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவருக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் 29 சாட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் சாட்சி விசாரணை தினந்தோறும் நடைபெற்றது.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, “குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்து நிரூபிக்கபட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. இவர்தான் குற்றம் புரிந்துள்ளார். எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என வாதிட்டார். ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
அனைத்து ஆதாரம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களும் தாக்கல் செய்யபட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால், அவர் தொடர்ந்தது சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு எதிரான வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.