அண்ணா பல்கலை. வளாகத்​தில் மாணவிகள் பாதுகாப்புக்கு சிறப்பு குழு அமைப்பு | special committee has been set up for the safety of students in Anna University

1345103.jpg
Spread the love

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வளாகத்தில் புதிதாக 30 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, கூடுதலாக 40 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வெளியாகி சர்ச்சையானதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகின்றன. அதன்படி பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது வெளியாட்கள் எளிதில் செல்ல முடியாதபடி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.மேலும், தொடர் நடவடிக்கைகளுக்காக பல்வேறு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் நலன்கருதியும், அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 140 பாதுகாவலர்கள் ரோந்து பணியில் 3ஷிப்ட்அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை 49பேரும், மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை 49 பேரும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை 42 பேரும் பணியாற்றுகின்றனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் கூடுதலாக 40 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதுதவிர அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் தற்போது 70 சிசிடிவி கேமிராக்கள் இருப்பதாகவும், அதில் 56 கேமிராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதையடுத்து ஏற்கெனவே பழுதாகியிருக்கும் சிசிடிவி கேமிராக்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், கூடுதலாக 30 சிசிடிவி கேமிராக்களை புதிதாக பொருத்தவும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்துக்குள் செயல்பட்டுவரும் விடுதிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படவும் விடுதி கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *