அண்ணா பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! | CM will Pay Tribute to Periyar on His Birth Anniversary

1376456
Spread the love

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று அண்ணா மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்தார்.

தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.

பெரியாரை தம் தலைவராகக் கொண்ட அண்ணா, தமது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கினார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, ”சென்னை மாகாணம்” என்று அழைக்கப்பட்டு வந்ததை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார்.

பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக அரசுப் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. கல்வியில் தமிழுக்கு முதலிடம் வழங்கினார். 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ’தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என மாற்றம் செய்தார். 1968ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை வழங்கி தமிழ்நாடு முன்னேற சிறப்புடன் செயல்பட்டார்.

தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியத்தை நீக்கிவிட்டு, “தமிழ்நாடு அரசு” என மாற்றினார். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும், அரசு முத்திரையில் “சத்ய மேவ ஜெயதே” என்ற வடமொழித் தொடரை அகற்றி “வாய்மையே வெல்லும்” என்ற சொல்லை இடம் பெறச் செய்தார்.

“ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் அண்ணா மறைந்தும், மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில், அண்ணா கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம், மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை அமைத்தார்.

முதல்வர் ஸ்டாலினால் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, 26.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கொண்டாடப்படும் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *