“அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை | DMK leader Rajiv Gandhi slams seeman

1377947
Spread the love

சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது.

இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது.

1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தமிழ் மாநாட்டில் நடக்காத விஷயத்தைச் சொல்லி அண்ணாவை பாஜகவின் அண்ணாமலை விமர்சித்தார். அவரின் வழித்தோன்றலாக பாஜகவின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான், அதே வழியில் அண்ணாவைக் கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல உலக அரசியலில் அண்ணா போன்ற இன்னொரு தலைவர் பார்க்க முடியாது. அண்ணா தமிழ்நாட்டின் முதலல்வராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, ஆல் போல் தழைத்து தமிழ்நாட்டின் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்பது மட்டுமல்ல – திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல – உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழ்த் தாயின் தலைமகன்; தமிழ்நாட்டு மக்களின் உயிரோட்டம். நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.

இன்றுவரை அண்ணாவே தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றார். அதன் வெளிப்பாடுதான், அண்ணாவைப் பொறுக்க முடியாமல்தான் ஆத்திரத்தில் வாய் வழியாக வாந்தி எடுத்திருக்கிறார் சீமான். எப்போதும் ஊடக வெளிச்சம் என்ற போதையைத் தேடும், மனப் பிறழ்வும், சுயநலப் பித்தும், ஒழுக்கக்கேடும் கொண்ட ஒருவர் அண்ணாவின் பெயரைக் கூடச் சொல்லத் தகுதியற்றவர். அண்ணாவைப் பற்றி எவரொருவரும் விமர்சிக்கக்கூடத் துணிந்ததில்லை. துணிந்தவர்கள் எல்லாம் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போனார்கள்.

வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்துவிடும் சீமான், ஊடகத்தினரைச் சந்திக்கும்போதும் சரி, மேடையில் பேசும்போதும் சரி, வரலாற்றைத் திரித்து, பொய்களை அள்ளிவிட்டு, தனக்கு முன் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணத்திலேயே கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார்.

திராவிட உணர்வை ஊட்டி தமிழ்நாட்டு மக்களைத் தலை நிமிரச் செய்தவர் அண்ணா. அவரது பெருமை சீமான் போன்ற தற்குறிகளுக்கு எப்படித் தெரியும்? தமிழ்நாட்டில் தற்போது ஒரு மோசமான அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூடினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று சில அரசியல் அரைவேக்காடுகள் நினைத்துக் கொள்கின்றன.

இன்றைக்குத் தமிழ்நாடும் தமிழர்களும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவை அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகள்தான். சாமனியன் உயர, தலை நிமிர வைத்த அண்ணாவைப் பழிப்பது சாமானிய மக்களைப் பழிப்பதற்குச் சமம்.

ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் சுமத்தப்பட்டிருந்த ஆதிக்கத்தை அடித்து நொறுக்கி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்திப் பிடித்த அண்ணாவை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும்.

அண்ணாவை தமிழர்கள் எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்பதற்கு அவரின் மறைவுக்குக் கடல்போல் கூடிய தமிழர்களின் பெருங்கூட்டமே சாட்சி. சீமான் மனிதர்களோடு பேசவே அருகதை அற்றவர். மாடுகளுடன் மரங்களுடனும் மலைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் மன நோயாளிகளுக்கு மனிதர்களிடம் பேசவே தெரியாது.

நாக்கை வைத்து அரசியல்தான் நடத்துவார்கள். ஆனால், சீமானோ அந்த நாக்கை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரபாகனுடன் இருக்கும் புகைப்படம், ஈழத்தில் துப்பாக்கி பயிற்சி, ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ திருக்குறளுக்கு பொய்யுரை, காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் எனச் சீமான் சொன்ன பொய்கள் எத்தனை எத்தனை?

கோயாபல்ஸ் கூட சீமானிடம் தோற்றுப் போய் நிற்பான். அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *