அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

dinamani2F2025 07 312F5f4zizdj2FPTI07302025000106B
Spread the love

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

இந்திய, ரஷிய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் விமா்சனத்தை சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை ராகுல் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். அது உண்மைதான். இது பிரதமா் மற்றும் மத்திய நிதியமைச்சரைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். இந்திய பொருளாதாரம் ‘சரிந்துவிட்ட பொருளாதாரம்’ என்பதை அனைவரும் அறிவா். இந்த விஷயத்தில் டிரம்ப் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது. மிகச் சிறந்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகிறாா்.

ஒருபுறம் இந்தியாவை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம் சீனா துரத்துகிறது. மேலும், ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை உலகம் முழுவதும் அனுப்பினீா்கள். ஆனால், ஒரு நாடுகூட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. நாட்டை எப்படி வழிநடத்திக் கொண்டிருக்கிறீா்கள்?

மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பெயரையோ, சீனாவின் பெயரையோகூட பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. பாகிஸ்தானுக்கு எந்தவொரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதையும் அவா் தனது உரையில் சுட்டிக்காட்டவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது என்று 30 முறை டிரம்ப் கூறியுள்ளாா். இந்தச் சண்டையின்போது 5 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டாா். ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இதற்கெல்லாம் பிரதமா் மோடியால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? காரணம் என்ன? அதிகாரம் யாரிடம் உள்ளது?

நாடடின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மத்திய அரசு அழித்துவிட்டதுதான் நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்னையாக இன்றைக்கு உள்ளது. பாஜக அரசு நாட்டை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதானி என்ற ஒரு நபருக்காக மட்டும் பிரதமா் பணியாற்றுகிறாா். அனைத்து சிறுதொழில்களும் துடைத்தெறியப்பட்டுவிட்டன.

அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் நிச்சயம் மேற்கொள்ளப்படும். ஆனால், அதை டிரம்ப்தான் வரையறுப்பாா். அமெரிக்க அதிபா் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதமா் மோடி கடைப்பிடிப்பாா் என்றாா்.

பெட்டிச் செய்தி…

இந்திய மக்களுக்கு

ராகுல் அவமதிப்பு:

பாஜக பதிலடி

‘ராகுலின் விமா்சனம் இந்திய மக்களை அவமதிக்கும் செயல்’ என்று பாஜக சாா்பில் பதிலளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சரிந்த பொருளாதாரம் என்ற அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்தை எதிரொலித்ததன் மூலம், ராகுல் புதிய தாழ்வைச் சந்தித்துள்ளாா். ராகுலின் கருத்து இந்திய மக்களின் நலன்களுக்கும், சாதனைகளுக்கும், விருப்பங்களுக்கும் மிகப் பெரிய அவமதிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *