“அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" – ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

Spread the love

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.

சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன.

தஸ்லிமா நஸ்ரீன்
தஸ்லிமா நஸ்ரீன்

நான் இந்த நாட்டின் குடிமகள் அல்ல. இந்தியாவில் பிறந்த பலரை விடவும், நான் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். எனக்கு ஓட்டுரிமை இல்லாவிட்டாலும், என் கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டு இந்த மண்ணிலேயே வாழ்கிறேன். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராகக் காட்டிக்கொள்வது அவருக்குப் பொருத்தமானதல்ல” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “நான் ஏ.ஆர். ரஹ்மானுக்குத் துணை நிற்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளங்களைக் கடந்து நிற்கும் ஒரு கலைஞனைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதும், இதற்கு இந்தியாவின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் மௌனம் காப்பதும் ஆழ்ந்த கவலையளிக்கிறது.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மட்டுமல்ல, அவர் இந்தியாவின் கலாசாரம் மற்றும் விழுமியங்களின் முதன்மையான தூதுவரும் கூட. அவர் பாரபட்சத்திற்கும் வெறுப்பிற்கும் மாறாக மதிப்பிற்கும், நன்றிக்கும் உரியவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்குக்கு ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் இடமில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, “அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு – இந்தியா உங்கள் தாய்; உங்கள் மரியாதையை வற்புறுத்திப் பெறுவதற்கு இங்கு பா.ஜ.க குண்டர்கள் தேவையில்லை. நீங்கள் உமர் போலச் சிறையில் அடைக்கப்படலாம், அலி கான் போல அலைக்கழிக்கப்படலாம், அக்லக் போலத் தாக்கப்படலாம்… ஆனாலும் நீங்கள் பயந்து மௌனமாக இருக்கக்கூடாது.

எட் சல்லிவன், முஹம்மது அலி போன்றவர்கள் பெரிய நட்சத்திரங்களாக இருந்தபோதிலும், எதற்கும் வளைந்து கொடுக்காமல் உறுதியாக, நிமிர்ந்து நின்று பிழைத்தார்கள். வந்தே மாதரம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *