நடிகர் ரஜினிகாந்த், உடல்நலப் பிரச்னைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இதய நாளத்தில் ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், இரண்டு நாள்களுக்கு முன்புதான் சென்னை திரும்பியிருந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு, அவருக்கு கடந்த ஒரு சில நாள்களாகவே உடல்நலப் பாதிப்பு இருந்ததாகவும் அதற்காக அவர் சில மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டு மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி, அக். 1ஆம் தேதி காலை 5 மணிக்கு ரஜினிக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கியிருக்கிறது. சுமார் மூன்று மணி நேரம் முக்கிய சிகிச்சை நடத்தப்பட்டு, ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.