கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் மினிஸ்ட்ரிக்கு சொந்தமான தேவாலயத்திற்கு 20மில்லியன் சில்லிங் அளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பானது இந்திய ரூ.1.35 கோடி எனக் கணக்கிடப்படுகிறது.
இந்த செயலானது அந்நாட்டின் விலைவாசி உயர்வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் அந்த தேவாலயத்தை கைப்பற்ற முயன்றனர். இதனால், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்தியும் பாறைகள் குவித்தும் அப்பகுதி சாலைகளை முடக்கினர். இருப்பினும், போலீஸாரின் பாதுகாப்புடன் தேவாலயத்தில் பக்தர்கள் பிராத்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!