Last Updated:
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மதுரை புதூர் பகுதியில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இன்று திடீரென முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஒன்றாக மரியாதை செலுத்தினர். மேலும், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது டிடிவி தினகரன், “சசிகலா இங்கு வருவதற்காக கொஞ்சம் காலதாமதமாக கிளம்பினார். அதன் காரணமாக எங்களோடு இங்கு அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், அவர் மனதார என்றைக்கும் எங்களோடு இருப்பார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மதுரை புதூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “அதிமுகவில் சர்ப்ரைஸாக அனைத்தும் நடக்கும். அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படும். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவேன் என்று சொல்கிறேன். அதனை பொறுத்திருந்து பாருங்கள் (Wait and See)” எனத் தெரிவித்தார்.
October 30, 2025 5:22 PM IST
