சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் பேசுகையில், “எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக இன்று போராட்டம் நடத்தியது. இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகளை நடத்தினால், பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும். இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொடுமைப் படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி கூட்டணி குறித்து விஜய்யுடன் பேசினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்கள் தலைவர் விஜய் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. அதுபற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களின் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று சொல்லிவிட்டோம். ஆட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் பேசமாட்டோம். அதிமுக இன்று ஆட்சியில் இல்லாத கட்சி. எனவே அவர்களைப் பற்றி பேசி மக்களை குழப்ப விரும்பவில்லை.
இன்று ஆட்சியில் உள்ள திமுகதான் எங்கள் பிரதான அரசியல் எதிரி. கொள்கை எதிரியாக பாஜக உள்ளது. கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அவர் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர்களை நாங்கள் வரவேற்போம்” என்றார்