“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” – மருது அழகு ராஜ் பேட்டி | Marudhu azhaguraj interview

Spread the love

ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக தாக்குவதில் வல்லவரான இவரை மாநில செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக நியமித்திருக்கிறது திமுக. அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

ஆளும் கட்சியாக இருக்கும் திமுக எஸ்ஐஆரைக் கண்டு ஏன் பயப்படுகிறது?

பயப்படவில்லை. பிஹார் தேர்தல் முடிவுகள் மூலம் ஏற்பட்டிருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வுதான்.

எதிர்க் கூட்டணியை விமர்சிக்க எதுவுமே கிடைக்காததால் தான் திமுக எஸ்ஐஆரை வைத்து அரசியல் செய்கிறதோ..?

திமுக-வுக்கு வலுவான கூட்டணியும், வெற்றிப் பின்னணியும், மக்களின் ஆதரவும் இருக்கிறது. இதே, 2009-10-களில் அப்போதைய திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த அதிருப்திகூட இப்போது 100 சதவீதம் கிடையாது. ஆகவே, திமுக கூட்டணியை வீழ்த்த எதுவுமே இல்லாத நிலையில் பாஜக கூட்டணி எஸ்ஐஆரை கையில் எடுத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

உங்கள் கூட்டணி வலுவானது என்றால், பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்தால் திமுக ஏன் பதற்றப்பட வேண்டும்?

பாஜக எந்தப் பக்கம் சேர்ந்தாலும் அதன் எதிரணிக்கான வெற்றி வாய்ப்பு பலமடங்காக அதிகரித்தது தான் வரலாறு. அதனால் தான் ஜெயலலிதா கூட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக-வை சேர்த்துக் கொண்டதில்லை. ஆகவே, பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலத்தை தந்திருக்கிறதே தவிர பதற்றத்தை அல்ல.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை உச்சரித்துப் பழகியவர்களுக்கு திமுக-வுடன் எளிதில் ஒட்டமுடியாதே… உங்களுக்கு எப்படி?

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை. இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது. அதுபோல், திமுக ஒன்றும் அதிமுக-வுக்கு நேர் எதிர் இயக்கம் இல்லை; நேர் மதர் (தாய்க் கழகம்) இயக்கம். அந்த விதத்தில், சகோதர இயக்கமான அதிமுக-வையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுக-வுக்கு வந்திருக்கிறது. அதனால், அதிமுக-வை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் எனக்கு துளியும் இல்லை.

விஜயகாந்த் கட்சியிலும் வேட்பாளராய் நின்றவர் நீங்கள்… விஜய்யின் செல்வாக்கை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிமுக தன் நிலையில் இருந்து தாழ்ந்து கீழே வீழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்துக்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவெக முயற்சிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கான முயற்சியை, உழைப்பை அந்தக் கட்சி முன்னெடுக்கவில்லை. அதிமுக நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்வார் விஜய் என நினைத்தேன். ஆனால், 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் இடத்துக்குப் போகவேண்டும் என்று சொன்னால், 3 மாதத்துக்கு ஒருமுறை 3 நிமிட வீடியோ வெளியிட்டால் மட்டும் அது நடக்காது.

அதிமுக-வுடன் தவெக கூட்டணி வைத்தால் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார்களே..?

நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக முழுமைபெற்ற அதிமுக இல்லை. ஒருவேளை, முழுமை பெற்ற அதிமுக-வாக இருந்திருந்தால் அது எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னொன்று, நான் தான் முதல்வர் என்று சொல்லிவிட்டு பழனிசாமி என்ற பலவீனமான தலைமையின் கீழ் உள்ள கூட்டணிக்கு விஜய் சென்றால் அது கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.

மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளே இல்லை என்கிறீர்களா?

நான் அப்படிச் சொல்லமாட்டேன். ஏனென்றால், நெல்லுக்கும் உமி உண்டு… நீர்க்கும் நுரை உண்டு… புல் இதழ் பூவிற்கும் உண்டு என்பதைப் போல குறைகளே இல்லாத அரசாங்கம் இருக்க முடியாது. ஆனால், இந்திய அரசாங்கத்தை விட இரட்டிப்பு வளர்ச்சியை திமுக அரசு கொடுத்திருக்கிறது. அரசியல் ஸ்திரத் தன்மையைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக, சாதி – மத மோதல்கள் இல்லை. அதைவிட முக்கியம், அரசின் திட்டங்கள். இதையெல்லாம் பறித்து இன்னொருவரிடம் கொடுக்க வேண்டிய அளவுக்கு கோபமோ அதிருப்தியோ மக்களிடம் நிச்சயமாய் இல்லை.

ஆட்சியில் பங்கு வாங்காமல் அடங்காது போலிருக்கிறதே காங்கிரஸ்?

இதை, கூட்டணிக்குள் குழப்பம் வரவேண்டும் என நினைப்பவர் களின் கனவாகத்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் இடங்களை வாங்கும் உத்தியாக இப்படி சிலர் பேசுகிறார்கள். போன தேர்தலைவிட நாங்கள் இப்போது வளர்ச்சிகண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டிவிட்டு கூடுதல் தொகுதிகளைக் கேட்டால் அது நியாயம். அப்படி இல்லாமல், எதிரில் இன்னொரு கூடாரம் வந்திருக்கிறது… கூடுதல் இடங்களைத் தரவில்லை என்று சொன்னால் அங்கே போய்விடுவோம் என்று சொல்வது சந்தர்ப்பவாதம். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி அதை நிச்சயம் செய்யாது.

உண்மையைச் சொல்லுங்கள்… பிரிந்தவர்கள் சேர்ந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா?

பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி என்ற இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். ஏனென்றால், இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும் ஒன்றாக இருக்க மாட்டார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *