விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்காமல் இருந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில் இன்று (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக ஆட்சியில் மூடப்பட்டது. பல்கலைக்கழகம் செயல்பட்டிருந்தால், மாணவர் சேர்க்கையில் பிரச்சினை எழுந்திருக்காது. ஜெயலலிதா பெயர்தான் பிரச்சினை என்றால், அம்பேத்கர் பெயரை வைக்க அதிமுக வலியுறுத்தியும் கேட்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் மூடிவிட்டனர்.
கல்வி என்ன வியாபாரமா, லாப நஷ்ட கணக்கு பார்ப்பதற்கு? அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை 53 சதவீதம் என திமுக கூறுகிறது. ஆனால், உயர் கல்வியில் 53 சதவீதத்தை எட்டியது என்ற சாதனைக்கு காரணம், அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு.
ஒரு சதவீதத்தை கூட உயர்த்தாமல், சாதனை என ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சியில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பல்கலைக் கழகம் என எதுவும் தொடங்கப்படவில்லை. அரசு நிதியில் இருந்து தொடங்காமல், கோயில் நிதியில் இருந்து கலைக் கல்லூரிகளை தொடங்குகின்றனர்.
கோயில் வளர்ச்சிக்காக, மேம்படுத்தவும், தூய்மையாக வைத்திருக்க, பக்தர்களுக்கு உணவு வழங்க, கோயிலை பராமரிக்க உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். விபூதி, குங்குமம், சந்தனம் வைக்க மாட்டோம் என சொல்லிவிட்டு, கோயில் நிதியில் கையை வைக்கின்றனர். கோயில் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து தனது கொளத்தூர் தொகுதியில் கல்லூரியை தொடங்கியவர்தான், இன்றைய முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் கோயில் நிதி ரூ.400 கோடி இருந்தது. திமுக ஆட்சியில் துடைத்து எடுத்துவிட்டனர்.
தமிழகத்தில் 50 கல்லூரிகளை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 50 கல்லூரிகளின் பெயரை பட்டியலிட வேண்டும். பொய் சொல்லக் கூடாது. ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடியது போல், பட்ட மேற்படிப்பு மையத்தையும் அரசு மூடப்பார்த்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஆர்ப்பாட்டம் எதிரொலியாக, மாணவர் சேர்க்கை நடைபெறும் என திருக்கோவிலூர் எம்எல்ஏ பொன்முடி கூறுகிறார்.
முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர், அண்ணாமலை பல்கலைக் கழகம் கூறவில்லை. விழுப்புரத்தில் உள்ள எம்எல்ஏ என்ன செய்கிறார்? அவர் இருக்கிறாரா? அவர் தொகுதியில் உள்ள முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பாக குரல் கொடுக்கவில்லை. திருக்கோவிலூர் எம்எல்ஏவுக்கு இருந்த அக்கறை, விழுப்புரம் எம்எல்ஏவுக்கு இல்லை.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை, திமுக ஆட்சியில் மூடப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும், அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது. நகராட்சி பிரசவ விடுதியை மூட திட்டமிட்டிருந்தனர். அதிமுக போராட்டம் நடத்தி, தடுத்து நிறுத்தியது. அனைத்தையும் தனியாருக்கு வழங்குவதுதான், திமுக அரசின் நோக்கம்.
மக்கள் எதிர்ப்புக்கு அரசு பணிந்துள்ளது. ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை மூடிய ஸ்டாலினுக்கு, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு மட்டும் நிதி இருக்கிறதா? அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி” என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.