சென்னை: “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் அனைவரும் கலந்துபோசி அதற்கான திட்டமிடுதலை உருவாக்குவோம்” என்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதிமுக முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன். பி.காந்தி ஆகியோர் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இதனால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கும் இடையிலான இந்தப் பனிப்போரில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்றுநோக்கி வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அமித் ஷாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வந்தனர். இதனால், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் சென்ற எம்.எல்.ஏக்கள், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமித் ஷா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அமித் ஷாவின் வலதுபக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணியும் உள்ளிட்ட அதிமுகவினரும், இடப்பக்கத்தில் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தனர்.
இந்தப் பேட்டியின் தொடக்கத்திலேயே உள்துறை அமித் ஷா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்று அறிவித்துவிட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறித்த தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடு என்ன, ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் அனைவரும் கலந்துபோசி அதற்கான திட்டமிடுதலை உருவாக்குவோம்” என்று அமித் ஷா பதிலளித்தார். இதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே, பாஜக ஆதரவுடன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது, பிரிந்ததுதான்.பிரிந்தது மட்டுமல்ல, அதிமுகவை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது தலைமையில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று, அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக் கழக அலுவலகத்தை என்று உடைத்தார்களோ, அப்போதே, அவர்கள் கட்சியில் இருப்பதற்கு தகுதியில்லாதவர்கள் ஆகிவிட்டனர். அதனடிப்படையில், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. | அமித் ஷாவின் செய்தியாளர் சந்திப்பு இங்கே முழுமையாக > எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு