“அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா?” – ஆ.ராசா எம்.பி விமர்சனம் | a raja slams edappadi palaniswami

1376164
Spread the love

சென்னை: “அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷாதான் முடிவு செய்வாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்?” என் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விகளை எழுப்பி விமர்சித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், ஒன்றிய அரசால் நடத்தபடுகின்ற கூட்டாட்சி தத்துவத்தின் படுகொலைக்கு எதிரான எதிராகவும், எல்லா தளங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற, காலச்சாரத்தை பறிக்கின்ற, மான உணர்வுகளை சிதைக்கின்ற ஒன்றிய அரசுக்கு எதிராகவும் இதுவரை இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எடுக்காத ஒரு முயற்சியை தமிழக முதல்வர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று மண், மொழி, மானம் காப்பதற்காக ஓரணியில் வரவேண்டும் என முயற்சியை எடுத்தார்.

அது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச் சாவடிகளிலும் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு இந்த முன்னெடுப்பின் முதற்கட்டத்தை திமுக வெற்றிகரமாக முடித்துள்ளது. தமிழ்நாடு முழுக்கவும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன.

இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டமபர் 15-ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன. அந்த உறுதிமொழிகளை கட்சித் தலைமைக்கு அனுப்பி அவற்றை தொகுத்து, அடுத்த கட்டமாக நமது தலைவர் 17-ஆம் தேதி கரூரில் நடைபெறவிருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை லட்சக்கணக்கான மக்களின் முன்பாக நிறைவேற்றுவார்.

அடுத்த கட்டமாக செப்.20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் கழக மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டங்களில் அரசியல் கட்சிகளை தாண்டி பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்பர்.

‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற பிரகடனத்தை தமிழ்நாடு முழக்க கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் அளவில் பொதுக் கூட்டம் நடைபெறும். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் முதல்வர் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார். இப்படி முயற்சியை இதுவரை இந்திய அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் எடுக்கவில்லை என்பது அதன் சிறப்பு” என்றனர்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா, “ ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இதுவரை ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களை இணைந்துள்ளோம். தன்னுடைய இயலாமையால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது. தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கத் துடிக்கின்றார்கள்.

ஓபிஎஸ் ஏதாவது அறிக்கை விட்டாலும் சரி, அமித் ஷாவை சென்று செங்கோட்டையன் சந்தித்தாலும் எடப்பாடிக்கு டிக் டிக் என அடிக்கிறது. யார் ஐசியூ-வில் இருக்கிறார்கள்? திமுக திடமாகத்தான் இருக்கிறது. எடப்பாடியை நினைத்தால் பயமாக இருக்கிறது. அவர் தனது உடல்நிலையை முதலில் கவனித்துக் கொள்ளட்டும். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்?

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக இருந்தவர் செங்கோட்டையன். அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என அமித் ஷாவும் சொல்லவில்லை, செங்கோட்டையனும் சொல்லவில்லை. இந்த கள்ளத்தனதுக்கு என்ன பெயர்? அவர்கள் மாறி மாறி அங்கு சென்று மண்டியிடுகிறார்கள். அதனால் தான் தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் என சொல்கிறேன்.

உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாதித்துதான் மசோதாக்களை பாஜக நிறைவேற்றுகிறதா? எங்கள் கூட்டணிக்குள்ளும் சில கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மாநில சுயாட்சி, சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை எல்லாம் காப்பாற்ற எங்கள் கூட்டணியில் கட்சிகள் இணைந்துள்ளன” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *