சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் மற்றும் விழுப்புரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகத்தின் பேச்சு காரணமாக சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த புகார் திமுக நிர்வாகியால் அளிக்கப்பட்டுள்ளது,” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்காக இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன்மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, அந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்படும். சி.வி.சண்முகம் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக விஏஓ உள்ளிட்ட 4 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.