“அதிமுக கூட்டணி முடிவு குறித்து பேச ‘துக்ளக்’ குருமூர்த்தி யார்?” – ஜெயக்குமார் சாடல் | Jayakumar warns Gurumurthy on bjp and admk alliance in tamil nadu

1347312.jpg
Spread the love

சென்னை: “பாஜக உடன் கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு. இது குறித்து ‘துக்ளக்’ குருமூர்த்தி என்ன பேசுவது? இவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும்” என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சாடியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 108 கிலோ பிரம்மாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சமமான ஒருவருடன்தான் போரிடுவேன் என பேசியவர் எம்ஜிஆர். அதனால்தான் 13 ஆண்டுகள் திமுகவை ஆட்சிக் கட்டிலில் விடாமல் இருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறிய பிறகு கருணாநிதி அமைச்சராகவும் இல்லை, முதல்வராகவும் இல்லை. தீய சக்தியாக இருக்கின்ற கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்ற வகையில் அதிமுகவை 1972-ல் ஆரம்பித்து 1977-ல் ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் புகழ் அனைத்து தரப்பு மக்களாலும் முழுமையாக போற்றக்கூடிய வகையில் உள்ளது. எம்ஜிஆர் புகழ்பாடுபவர்கள் யாராவது கருணாநிதியை புகழ்கிறார்களா? கருணாநிதியை ஒருவரும் புகழப்போவது கிடையாது. தனது அப்பாவினுடைய சமாதிக்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவு கோடி செலவு பண்ணினாலும், மக்கள் அதிகம் வரப்போவது கிடையாது. பொங்கல் தினத்தன்றுகூட எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு வந்தவர்களில் 10% கூட கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து இருக்க மாட்டார்கள். எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாத அழியாத புகழுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

ரூ.526 கோடியில் கருணாநிதி பன்னாட்டு மையம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பாட்டி விமர்சித்த வீடியோ வைரலாகி வருகிறது. பன்னாட்டு மையம் அமைக்க ரூ.526 கோடி பணம் இருக்கிறது. பொங்கல் பரிசாக எடப்பாடியார் ரூ.2000 கொடுத்தார். அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என்றீர்கள். தற்போது நீங்கள் ரூ.5000 வேண்டாம், ரூ.2500 ஆவது கொடுக்கலாம். அல்லது ரூ.1000 ஆவது கொடுக்கலாம். ஆனால் மக்களுக்கு பட்டை நாமம்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்னிடம் பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். மீண்டும் அதற்கு ஆளாகக் கூடாது என்றால் அவர் வாயை அடக்க வேண்டும். பாஜக உடன் கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு. கட்சி முடிவு எடுத்த பிறகு இவர் என்ன பேசுவது? இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக் கொள்ள நேரிடும்” என தெரிவித்தார்.

‘துக்ளக்’ குருமூர்த்தி பேசியது என்ன? – சமீபத்தில் நடந்த ‘துக்ளக்’ இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழாவில், அந்த இதழின் ஆசிரியர் குரு​மூர்த்தி பேசும்போது, “அடுத்த ஆண்டு தேர்தல் வருவ​தால் எல்லா கூட்​ட​ணி​யிலும் நிலை​யற்ற நிலைமை உள்ளது. திமுகவை தோற்​கடிக்க பாஜக​வும், அதிமுக​வும் சேர வேண்​டும் என்ப​தில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒரு தலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரிய​வில்லை. திமுகவை தோற்​கடிக்க வேண்​டும் என்ற உறுதி பழனிசாமி​யிடம் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *